Conceptual Design of Information System in Tamil | தகவல் உருவாக்கத்தின் கருத்தியல் மாதிரி.

உள்ளடக்கம்

  1. முறைமை என்றால் என்ன?
  2. தகவல் உருவாக்கத்தின் கருத்தியல் மாதிரி.
  3. இலக்கமுறைக் கணினி ஒன்றின் செயல்கள்.

முறைமை என்றால் என்ன? (What is System)

பொதுவான ஒரு நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு கூறுகளின் தொகுப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டவை முறைமை எனப்படும். ஒரு முறைமையானது உள்ளீடு (Input), முறைவழியாக்கம் (Process), வெளியீடு (Output) என்பவற்றைக் கொண்டிருப்பதோடு ஒரு முறைமையானது பல உப முறைமைகளைக் (Sub Systems) கொண்டு அமைக்கப்பட்டிருக்கலாம்.



தகவல் முறைமை ஒன்றில் முறைமைக்கு வழங்கப்படுகின்ற தரவுகளானது கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு (Instructions) அமைய முறைவழியாகத்திற்கு உட்படுத்தப்பட்டு வெளியீடாகத் தகவல் (Information) பெறப்படுகின்றது.

தகவல் உருவாக்கத்தின் கருத்தியல் மாதிரி

தகவல் உருவாக்கத்தின் கருத்தியல் மாதிரியானது தரவு (Data), முறைவழியாக்கம் (Process), தகவல் (Information) என்பவற்றினைக் கொண்டுள்ளது. உள்ளீடு (Input) வழியாக கணினிக்குத் தேவையான தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பன பயனரினால் வழங்கப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு கணினி உள்ளீட்டுச் சாதனங்கள் (Input Devices) பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக Keyboard, Mouse என்பன பிரதான உள்ளீட்டுச் சாதனங்களாகும்.



கணினிக்கு வழங்கப்பட்டிருக்கின்ற தரவுகளானது முறைவழியாக்க அலகினால் (CPU - Central Processing Unit) முறைவழிப்படுத்தளுக்கு (Arithmetic Operation and Logical Operation) உட்படுத்தப்பட்டு தகவல்களாக மாற்றப்படுகின்றது. இதற்கு கணினியில் காணப்படுகின்ற முறைவழியாக்கச் சாதனமான மையமுறைவழியலகு (CPU) பயன்படுத்தப்படுகின்றது. இதன்போது பயனரினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கேட்பவே கணினியானது செயற்படும்.

கணினியானது பயனரினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கேட்ப செயற்படுவதன் காரணமாக பயனர் அறிவுறுத்தல்களை வழங்கும்போது அவற்றினை தேக்கி வைப்பதற்கான ஒரு இடமாக தரவு தேக்கத்தைப் பயன்படுத்துகின்றது. இது தரவுகளை முறை வழிப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் தரவுகள் முறை வழிப்படுத்தப்பட்டதன் பின்னர் கிடைக்கக்கூடிய வருவிளைவுகள் (Output) என்பவற்றினை தற்காலிகமாக சேமிக்கவும் பயன்படுத்தப்படும்.

தரவு முறைவழியாக்கத்தின் பின்னர் வருவிளைவாக (Output) கிடைக்கக்கூடிய தகவலானது வெளியீட்டுச் சாதனங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இங்கு பிரதானமான வெளியீட்டுச் சாதனமாக கணினித்திரையைக் குறிப்பிடலாம்.

இலக்கமுறை கணினி ஒன்றின் செயல்கள் (Functions of a Digital Computer)

ஒரு இலக்க முறைக் கணினியானது பின்வரும் 5 செயல்களையும் மேற்கொள்கின்றன அவையாவன

1. உள்ளீடாகத் தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்.

2. பெற்றுக்கொண்ட தரவு மற்றும் அறிவுறுத்தல்கள் என்பவற்றை அதன் நினைவகத்தில் வைத்துக் கொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்தல்.

3. தரவுகளை முறை வழிப்படுத்தி பிரயோசனமுள்ள தகவல்களாக மாற்றுதல்.

4. வெளியிட்டினை உருவாக்குதல்.

5. மேலுள்ள நான்கு படி முறைகளையும் கட்டுப்படுத்தல்.


Post a Comment

0 Comments