Computer System in Tamil | கணினி முறைமை

உள்ளடக்கம்

  1. கணினி என்றால் என்ன?
  2. கணினி வன்பொருள்.
    1. உள்ளீட்டுச் சாதனங்கள்.
    2. வெளியீட்டுச் சாதனங்கள்.
    3. முறைவழியாக்கச் சாதனங்கள்.
    4. வலையமைப்புச் சாதனங்கள்.
    5. நினைவகச் சாதனங்கள்.
  3. கணினி மென்பொருள்.
  4. கணினி நிலைபொருள்.
  5. கணினி உயிர்பொருள்.

கணினி என்றால் என்ன?

“பயநரினால் உள்ளிடப்படும் அல்லது தொகுதியினால் சேர்க்கப்படும் தரவுகளைப் பெற்றுக் கொண்டு அத்தரவுகளைப் பயநரினால் தரப்படும் அறிவுறுத்தல்களுக்குக்கேட்ப முறைவழிப்படுத்தி அவருக்குத் தேவையானவாறு தகவல்களை வெளியிடும் மின் வலுவினால் இயக்கப்படும் உபகரணம்” எனக் கணினியை அழைக்கலாம். கணினி முறைமையானது (Computer System) பிரதானமாக வன்பொருள் (Hardware), மென்பொருள் (Software), நிலைபொருள் (Firmware), மற்றும் உயிர்பொருள் (Live ware) எனும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது.

கணினி வன்பொருள் (Computer Hardware)

திட்டமான வடிவத்தை கொண்டதும் தொட்டுணரக் கூடியதுமான கணினிப் பாகங்கள் வன்பொருள் எனப்படும். இவைகள்



  1. உள்ளீட்டுச் சாதனங்கள் (Input devices)
  2. வெளியீட்டுச் சாதனங்கள் (Output devices)
  3. முறைவழிச் சாதனங்கள் (Processing devices)
  4. வலையமைப்புச் சாதனங்கள் (Network devices)
  5. நினைவகச் சாதனங்கள் (Memory devices)

என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளீட்டுச் சாதனங்கள் (Input Devices)

கணினிக்குத் தரவுகளையும் (Data), அறிவுறுத்தல்களையும் (Instruction) உட்செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற சாதனங்கள் உள்ளீட்டுச் சாதனங்கள் எனப்படும். உதாரணமாக சுட்டி (mouse), தடப்பந்து (trackball), இயக்குபிடி (joystick), ஒளிப்பேனா (light pen) என்பவற்றைக் குறிப்பிடலாம். இவைகள் சுட்டுச் சாதனங்கள் (Pointing devices) எனவும் அழைக்கப்படும்.



கணினிக்குத் தேவையான தரவுகளை உள்ளீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சாதனமாக சாவிப் பலகை (keyboard) காணப்படுகின்றது. இது பல்வேறு வகையான சாவிகளைக் (Keys) கொண்டுள்ளது அவையாவன

  1. Typing keys (letters, symbols, punctuations)
  2. Control keys (Ctrl, Alt, Windows, Esc)
  3. Function keys (F1, F2, F3, … , F12)
  4. Navigation keys (Arrow Keys, Home, End, Page up, Page down, Delete, Insert)
  5. Numeric keys (0, 1, 2, …. 9, +, -, /, *)

வருடி (Scanner) எனும் உள்ளீட்டுச் சாதனம் தரவு மூலத்திலிருந்து படிமங்களைக் கவர்ந்து (Scan) அதனை இலக்க முறை (Digital Format) வடிவிற்கு மாற்றிச் சேமிக்கக் கூடிய சாதனமாகும். இப்படிமங்களை அச்சிடுவதற்கு (Print) முன் பதிப்புகளை (Copy) மேற்கொள்ளலாம்.

நுணுக்குப் பண்ணி (microphone) ஒலியை உள்வாங்கி இலக்க முறை வடிவில் சேமிக்கக் கூடியது. மேலும் காந்த மை எழுத்துரு வாசிப்பான் (MICR), ஒளியியல் எழுத்துருவாசிப்பான் (OCR) போன்றவைகள் உள்ளீட்டுச் சாதனங்களுக்கான சில உதாரணங்களாகும்.

வெளியீட்டுச் சாதனங்கள் (Output Devices)

கணினி முறைமையிலிருந்து (Computer System) தகவல்களை வெளியீடு செய்வதற்காகப் பயன்படுத்துகின்ற சாதனங்கள் வெளியீட்டுச் சாதனங்கள் எனப்படும். இது கட்புலக் காட்சி அலகு (Visual Display Unit) எனப் பொதுவாக அழைக்கப்படும். இது பிரதானமாக மூன்று வகைப்படும் அவையாவன.



  1. மென்நகல் (Soft Copy)
  2. வன்நகல் (Hard Copy)
  3. ஒலி (Sound)

மென்நகல் (Soft Copy)

மென்நகல் என்பது திரை (Display) மீது பார்ப்பதற்காக மாத்திரம் தகவல்களை வெளியிடுதல் ஆகும். மென்நகல் வடிவத்தில் தகவல்களை வெளியிடும் கருவிகளாவன,

திரை (Monitor / Screen)

மென் நகலாகத் தகவல்களை வெளியிடும் முக்கிய சாதனம் கணினித் திரையாகும். இது கற்புலக் காட்சி அலகு (VDU) எனப்படும். கணினி திரையில் பல வகைகள் உள்ளன அவையாவன.

கதோட்டுக் கதிர்க் குழாயுடன் கூடிய திரை (CRT - Cathode Ray Tube) இது ஆரம்ப காலங்களிலிருந்து இன்றுவரை வெளியீட்டு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் திரையானது அளவில் பெரிதாக காணப்படுவதுடன் அதிகளவு மின்சாரத்தையும் நுகரக்கூடியது. தற்போதைய காலங்களில் படிப்படியாக இவற்றின் பயன்பாடானது நீங்கி வருகின்றது.

திரவப் பளிங்குக் காட்சி (LCD - Liquid Crystal Display) இக்கணினித் திரை சமதளக் காட்சி தொழில்நுட்பவியலுக்கேட்ப உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒருவகையான பளிங்குக் கரைசலைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதோடு மின்சாரத்தையும் குறைந்தளவிலேயே நுகருகின்றது.

ஒளிகாலும் இருவாயி ( LED - Light Emitting Diode) இங்கு திரவப் பளிங்குக் கரைசலுக்குப் பதிலாக ஒளிகாலும் இருவாயியைப் பிரயோகித்து அமைக்கப்பட்டுள்ளது. இது அதிக கவர்ச்சி தேவைப்படும் பொது இடங்களில் சைகைகள், காட்சிப் பலகைகள், வர்த்தகப் பெயர் பலகைகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது இன்று பிரசித்தி பெற்ற ஊடகமாகக் காணப்படுவதுடன் இதற்கான காரணம் குறைந்த அளவான மின்னுகர்ச்சியே ஆகும்.

பல்லூடக எரிவை (Multimedia Projector)

ஒரே தடவையில் பலர் இரசிக்கத்தக்க அகன்ற திரையில் தகவல்களை வெளியிட வேண்டிய போது பயன்படுத்தப்படும் கருவி பல்லூடக எரிவையாகும். இது தற்காலங்களில் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு சாதனமாகக் காணப்படுவதோடு, பல்வேறு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வன்நகல் (Hard Copy)

கணினித் திரையில் (Display) காணப்படுகின்ற தரவு மற்றும் தகவல்களை தாளில் அச்சு பிரதி செய்து, பெற்றுக்கொள்ளும் போது அது வன்நகல் எனப்படும். இதற்காக அச்சுப்பொறி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன அவற்றுள் சில பின்வருமாறு

  1. புள்ளி அமைவுரு அச்சுப்பொறி (Dot matrix printer)
  2. மை பீச்சு அச்சுப்பொறி (inkjet printer)
  3. லேசர் அச்சுப்பொறி (laser printer)
  4. வரைவி (graphic plotter)

ஒலிபெருக்கி (Speaker)

கணினியிலிருந்து ஒலியினை வெளியீடாகப் பெற்றுக்கொள்ளும் பிரதான சாதனமாக ஒலிபெருக்கி (Speaker) காணப்படுகின்றது.

முறைவழிச் சாதனங்கள் (Processing Devices)

மத்திய செயற்பாட்டலகானது (CPU) கணினியில் காணப்படும் பிரபல்யமான முறைவழியாக்கச் சாதனமாகும் (CPU - central processing unit). இது கணினியில் காணப்படும் மற்றைய சாதனங்களை கட்டுப்படுத்துகின்றன. கணித ரீதியிலானதும் தர்க்க ரீதியிலானதுமான செயற்பாடுகள் மத்திய செயல்பாட்டு அலகின் உள்ளேயே மேற்கொள்ளப்படுகின்றது.

பட முறைவழியாக்கும் அலகானது (GPU - Graphical Processing Unit) ஒரு தனிச் சிறப்பான இலத்திரனியல் சுற்றாகும். இது நினைவகத்தினை முகாமை செய்து படங்களினை தெரிவிப்பியில் (Monitor) காட்சிப்படுத்தப் பயன்படுகிறது. GPU ஆனது இணைந்த முறைமைகளிலும் தனியாள் கணினிகளிலும் (Personal Computer) workstation, மற்றும் game console என்பவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. முறைவழியாக்கச் சாதனங்களுக்கான உதாரணங்கள் - (CPU - Central Processing Unit), (GPU - Graphics Processing Unit), Sound Card, Video Card, Motherboard, Network Card.

வலையமைப்புச் சாதனங்கள் (Network Devices)

கணினி வலையமைப்புச் சாதனங்கள் பௌதீகவியல் சாதனங்களாகும். இவை கணினி வலையமைப்பில் காணப்படும் சாதனங்களுக்கிடையில் தொடர்பாடலுக்காகவும் தரவுப் பரிமாறளுக்காகவும் பயன்படுத்தப்படும் சாதனங்களினை வகைக் குறிக்கின்றன. உதாரணம் குவியன் (Hub), ஆளி (Switch), வழிப்படுத்தி (Router), நுழைவாயில் (Gateway), வலையமைப்பு இடைமுக அட்டை (NIC -Network Interface Card) என்பவற்றினை குறிப்பிடலாம்.



நினைவகச் சாதனங்கள் (Storage Devices)

தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் சேமிப்பதற்கு நினைவகம் பயன்படுத்தப்படுகின்றது. கணினி முறைமையில் முறைவழியாக்கத்திற்கு உட்படுகின்ற தரவுகளையும் முறைவழிப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வைத்திருக்கும் சேமிப்பிடமாகக் காணப்படுகின்றது. நினைவகம் அதிக எண்ணிக்கையிலான களம் (Cell) எனப்படும் சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் அல்லது களத்திற்கும் தனியான முகவரியொன்று காணப்படுகின்றது இவற்றினைப் பயன்படுத்தியே கணினியானது அதன் நினைவகத்தை அணுகுகின்றது. நினைவகமானது மூன்று வகையாக வகுக்கப்பட்டுள்ளது.



பதுக்கு நினைவகம் (Cache Memory)

பதுக்கு நினைவகம் மிக வேகமான குறைகடத்தி நினைவகமாகும். இது மத்திய செயற்பாட்டலகின் (CPU) செயல்படு வேகத்தை அதிகரிக்க வல்லது. இது மத்திய செயற்பாட்டலகிற்கும் பிரதான நினைவகத்துக்கும் இடையில் தேக்கமாகச் செயல்படுகின்றது. உதாரணம் (L1, L2, L3 Cache).

முதன்மை அல்லது பிரதான நினைவகம் (Primary Memory / Main Memory)

பிரதான நினைவகமானது தற்போது கணினி இயங்கிக் கொண்டிருப்பதற்குத் தேவையான தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் மாத்திரம் வைத்திருக்கும். வரையறுக்கப்பட்ட கொள்ளளவு கொண்ட இந்நினைவகம் மின்சார துண்டிப்பு ஏற்படும் போது அதன் தரவுகளை இழந்து விடும். உதாரணம் (RAM).

இரண்டாம் தர நினைவகம் (Secondary Storage Device)

இவ்வகை நினைவகம் புற நினைவகம் அல்லது நிலையான நினைவகம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதான நினைவகத்தை விடவும் வேகம் குறைந்தது. இது தரவு மற்றும் தகவல் என்பவற்றை நிலையாகச் சேமிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. உதாரணம் (Hard disk).

கணினி மென்பொருள் (Computer Software)

கணினி மென்பொருள், முறைமை மென்பொருள் (System Software) மற்றும் பிரயோக மென்பொருள் (Application Software) என இரு வகைப்படும். கணினியின் பாகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் செயற்படுத்துவதற்குமாக உருவாக்கப்பட்ட மென்பொருள், முறைமை மென்பொருளாகும். இது பிரயோக மென்பொருள் இயங்குவதற்குத் தேவையான தளத்தினை உருவாக்குகின்றது. முறைமை மென்பொருளானது கீழ் காணப்படும் மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  1. இயக்க முறைமை
  2. பயன்பாட்டு மென்பொருள்
  3. மொழிபெயர்ப்பிகள்

இயக்கமுறைமை (Operating System)

கணினியில் நிறுவப்பட்டுள்ள ஏனைய மென்பொருள்கள், வன்பொருள்கள் ஆகியவற்றை முகாமை செய்து பயநர் கணினியைப் பயன்படுத்த வசதி செய்து கொடுப்பதே பணிசெயல் முறைமையின் பிரதான தொழிலாகும். இது பயநர் மற்றும் கணினி வன்பொருள்கள் ஆகியவற்றுக்குகிடையிலான தொடர்பை ஏற்படுத்துகின்றது.

பயன்பாட்டு மென்பொருள் (Utility Software)

கணினியில் நிறுவப்பட்டுள்ள ஏனைய மென்பொருள்களை பகுப்பாய்வு செய்தல், இயைபாக்கள், குறித்து செயலற்பாடுகளுக்கு மிகப் பொருத்தமான மென்பொருளைத் தெரிவு செய்தல், கணினியைப் பராமரித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கென ஆக்கப்பட்டவையே இந்த மென்பொருளாகும். அவ்வாறான சில மென்பொருள்கள் வருமாறு

  1. Antivirus Software
  2. File Management System
  3. Disk Management Tools
  4. Compression Tools
  5. Disk Cleanup Tool
  6. Disk Defragmenter
  7. Backup Utility

மொழிபெயர்ப்பிகள் (Language Translators)

கணினிச் செய்நிரல்கள் (Software -மென்பொருள்கள்) அறிவுறுத்தல்களின் தொகுப்பினால் ஆக்கப்பட்டவையாகும். இவை மனித மொழிக்கு நெருக்கமான உயர்மட்ட மொழிகளைப் (High Level Language) பயன்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. இவற்றைக் கணினியால் விளங்கிக் கொள்ளக்கூடிய மொழியான (Machine Language - இயந்திர மொழி) 1, 0 ஆகியவற்றில் மொழிபெயர்ப்பதே மொழிபெயர்ப்பிகளின் தொழிலாகும். இவற்றிற்கான சில உதாரணங்கள் வருமாறு

  1. ஒருங்குசேர்ப்பி (Assembler)
  2. தொகுப்பி (Compiler)
  3. வரிமொழி மாற்றி (Interpreter)

பிரயோக மென்பொருள்கள் (Application Software)

குறித்த தேவையினைத் திருப்திப்படுத்துவதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. இது சாதாரண ஒரு எளிய செய்நிரலாகவும் காணப்படலாம். உதாரணமாக Microsoft நிறுவனத்தின் Notepad ஆனது எளிய எழுத்துக்களை உருவாக்கவும் மாற்றவும் உதவுவதோடு பல தொகுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டுள்ளது. இது மென்பொருள் பொதிகள் (software package) என அழைக்கப்படும்.

மென்பொருளானது திறந்த மூல மென்பொருள்கள் (FOSS - free and open source software) மற்றும் உரிமை உள்ள மென்பொருள்கள் (license software) என இருவகைப் படுத்தப்படுகின்றது. திறந்த மூல மென்பொருள்கள் மூலச்செய்நிரல்களைப் (source code) பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் முடிவதுடன் இதனை இலவசமாகவும் பயன்படுத்தலாம். உரிமையுள்ள மென்பொருள்கள் மூலச்செய்நிரல்களை பயன்படுத்துவதற்கோ அல்லது பார்ப்பதற்கோ முடியாது. இதனை பயன்படுத்தும் போது குறித்த மென்பொருளின் உரிமையாளரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இது பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டிய ஒரு மென்பொருளாகக் காணப்படுகின்றது.

நிலைபொருள் (Firmware)

நிலை பொருளானது ஒரு தொகுதி கட்டளைகளின் அல்லது அறிவுறுத்தல்களின் திரட்டாகும் (Software) இது வன்பொருள்களுடன் நிலையாக உட்பொதுந்து காணப்படும். மேலும் இவை கணினி சார்ந்த சகல கருவிகளிலும் காணப்படுகின்றன. உதாரணம் Keyboard, Hard Disk, USB Drives, VGA Card, Mobile Devices.

இவை வன்பொருட்களுக்கு அத்தியவசியமான ஒன்றாகக் காணப்படுவதோடு வன்பொருட்களில் உட்பொதிந்து (Embed) காணப்படுவதனால் உட்பொதிந்த மென்பொருள் எனவும் அழைக்கப்படுகின்றது. இது கணினியின் அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டு (BIOS - Basic Input Output System) செயல்பாடுகளை மேற்கொள்வதொடு கணினியானது அதன் ஏனைய சாதனங்களோடு தொடர்பாடலை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

கணினி நிலைபொருள் மென்பொருளானது வாசிப்பு மட்டும் நினைவகத்தில் (ROM - Read only memory) உட்பொதியப்பட்டு கணினி ஆரம்பிப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.

உயிர் பொருள் (Live ware)

இது கணினியை பயன்படுத்தக்கூடிய பயனர்களைக் (User) குறித்து நிற்கின்றது. உதாரணமாக

  1. Hardware Engineer
  2. Software Engineer
  3. Network Engineer
  4. Database Administrator
  5. Software Developer
  6. Web Designer
  7. Graphic Designer

Post a Comment

0 Comments